×

இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ.450 கோடி வாடகை கேட்ட நிலம் நீதித்துறைக்கு சொந்தமானது

திருப்பூர், ஜன.23: இந்து சமய அறநிலை துறை சார்பில் காங்கயம் நீதிமன்றத்திற்கு ரூ.450 கோடி வாடகை பாக்கி கேட்ட விவகாரத்தில் அந்த நிலம் நீதித்துறைக்கானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றம் அமைந்துள்ள நிலம், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது என்றும், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை வாடகை பாக்கி, அதற்கு வட்டியை சேர்த்து தற்போதைய சந்தை மதிப்பு படி ரூ.450 கோடி உரிய காலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்துமாறு சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனைதொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினார். அதில் சமந்தபட்ட இடம் அரசுக்கு சொந்தமாக கையகப்படுத்தப்பட்டு பின்னர் அந்த நிலம் உரிய முறையில் நீதித்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. அதன் பிறகு நீதித்துறையின் கோரிக்கையை ஏற்று அரசு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு கடந்த 2012 ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட கடிதம் தொடர்பாக மேல் விசாரணையை நிலுவையில் உள்ளது என்று திருப்பூர் மாவட்ட நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Judicial Department ,land ,Department of Hindu Religious Affairs ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!