பொங்கல் பண்டிகையன்று மாவட்டத்தில் ரூ.17.15 கோடிக்கு மது விற்பனை

திருப்பூர், ஜன. 23:  திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி 2 நாளில் ரூ. 17.15 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ. 90 லட்சத்திற்கு அதிகமாகும். பனியன் தொழில்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் வெளி மாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். கடினமாக உழைத்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் மகிழ்ச்சிக்கு மது அருந்துபவர்கள் என பலவகையாக உள்ளார்கள். திருப்பூரில் 236 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் நாளொன்றுக்கு ரூ. 5 கோடியே 17 லட்சத்திற்கு மது விற்பனையாகிறது. மது விற்பனையில் தமிழக அளவில் திருப்பூர் 5ம் இடத்தை பிடித்துள்ளது. பண்டிகை காலங்களில் மேலும் மது விற்பனை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த 14 ம் தேதி பிராந்தி, 11 ஆயிரத்து 998 பெட்டிகளும், பீர் 4 ஆயிரத்து 801 பெட்டிகளும் விற்பனையாகி உள்ளன. ரூ. 7 கோடியே 48 லட்சம் மதிப்பில் மது விற்பனையாகியுள்ளது. 15ம் தேதி பொங்கல் பண்டிகையன்று பிராந்தி வகை 15 ஆயிரத்து 467 பெட்டிகளும், பீர் 6 ஆயிரத்து 1 பெட்டிகளும் விற்பனையாகி உள்ளன. இது 9 கோடியே 67 லட்சம் ஆகும். அந்த வகையில் மொத்தம் 2 நாட்களில் ரூ. 17 கோடியே 15 லட்சத்திற்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.90 லட்சத்திற்கு அதிகமாக விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: