ஊராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி முகாம் ஊராட்சி வருவாய்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை, ஜன. 23: ஊராட்சி வருவாய்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுக பயிற்சி முகாம் நேற்று ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்தது. இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி திட்ட இயக்குனர் முருகேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முகாமில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:- வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு வாழ்த்துகள். பெண்கள் உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்குபெற வேண்டும் என தேர்தலில் போட்டியிட 50 சதவீதம் ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெண்கள் அதிகமானோர் வந்துள்ளனர். அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய துறை ஊராட்சி துறை. கிராமத்தில் உள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினை தீர்த்து வைக்கக்கூடிய பொறுப்பு ஊராட்சி தலைவர்களுக்கு உண்டு.

மக்களின் நேரடி பிரச்சினைகளை தீர்க்க வைக்க சேவை மனதுடன் செயல்பட வேண்டும். அனைத்து பிரச்னைகளையும் ஊராட்சி பிரதிநிதிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்துகளுக்கு அரசு சார்பாக அதிகப்படியான நிதி ஒதுக்கி தரப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் கிராம சாலைகள் 1 லட்சத்து 2 ஆயிரம் கிலோமீட்டர், அதன் பின் 48 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் இந்த ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை சிறப்பாக செயல்பட்டதிற்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளது. சுகாதாரம் மிகவும் முக்கியம். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கும் பொறுப்பு ஊராட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது. தமிழகத்தில் கிராமங்களில் புதிதாக 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் டன் குப்பைகள் தமிழகத்தில் சேர்கிறது. இதனை பல்வேறு விதங்களில் அழிக்கக்கூடிய பொறுப்பு ஊராட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது. பசுமை வீடு கட்டுதல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டம் கிராம பஞ்சாயத்துகள் மூலமாக செயல்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், மழை நீர் சேகரிப்பு அமைத்தல் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

ஊராட்சி வருவாயான வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்டவற்றை முறையாக கையாள வேண்டும். ஊராட்சி வருவாய்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் 228 ஊராட்சிகளை சேர்ந்த 456 ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் கலந்துகொண்டனர். முகாமின் ஒரு பகுதியாக ஊரட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு பயிற்சி கையேடுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

Related Stories: