ரூ.5.90 லட்சத்தில் அமைத்த சாலையை காணவில்லை

சூலூர்,ஜன.23: பாப்பம்பட்டி ஊராட்சியில் காங்கிரீட் சாலையை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில்  காங்கிரீட் சாலை போடாத நிலையில் சாலை போட்டதாக கூறி  கல்வெட்டு அமைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாப்பம்பட்டி  3வது வார்டு ராதிகா டெய்லர் வீடு முதல் பெருமாள் நகர் தண்ணீர் டேங்க் வரை காங்கிரீட் சாலை அமைக்கப்படவில்லை. இருந்தும் அந்த குறிப்பிட்ட  பகுதியில் கடந்த 2019ம் ஆண்டே  ரூ.5.90 லட்சம் மதிப்பில் காங்கிரீட் சாலை அமைத்ததாக கூறி வேறொரு பகுதியில் சமீபத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. திடீரென கல்வெட்டு வைத்ததால் சந்தேகமடைந்த அந்த பகுதி பொதுமக்கள்  கல்வெட்டு குறித்து ஊராட்சி அலுவலகத்தில் சென்று கேட்டுள்ளனர்.  அதற்கு  ஊராட்சியின் அலுவலகத்தில் சரியான தகவல் கிடைக்காததால் ஆன்லைன் மூலம் பாப்பம்பட்டி ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்துள்ளனர். அதில் அமைக்கப்படாத அந்த காங்கிரீட்  சாலையை அமைத்ததாக கூறி தங்கவேல் என்பவருக்கு  ரூ.5.90 லட்சம் காசோலை அளிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை எதுவும் போடாமல் பணத்தை கையாடல் செய்ததை கண்டுபிடித்த பொதுமக்கள்  தி.மு.க. ஊராட்சி செயலாளர் கணேசன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.இது தொடர்பாக சாலை அமைத்ததாக கூறிய காலகட்டத்தில் ஊராட்சி செயலராக இருந்த ஜெகதீசனிடம் இந்த சாலை அமைக்காத மோசடி புகார் குறித்து  கேட்டபோது, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காங்கிரீட்  சாலையை  அமைக்க திட்டமிட்டு, அதற்கான பணம் எடுத்ததாகவும், ஆனால் குறிப்பிட்ட அந்த சாலைக்கு பதிலாக வேறு இடத்தில் காங்கிரீட் சாலை அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.கல்வெட்டில் உள்ளபடி  பணம் எடுத்த சாலையை அமைக்காமல் சம்பிரதாயத்திற்காக அமைக்காத சாலையின் பெயரில் கல்வெட்டு வைத்ததாகவும், இதில் தவறு ஏதும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.  போடாத சாலைக்கு கல்வெட்டு வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் வரும் 26ம் தேதி நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் விளக்கம் கேட்கவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: