ரூ.52 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறிச்சி குளக்கரையில் நடைபயிற்சி சைக்கிளிங் தளம் அமைகிறது

கோவை, ஜன. 23:  பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த குறிச்சி குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. இங்கு ரூ.52 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், வாளாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் என 8 குளங்கள் உள்ளன. 334.92 ஏக்கர் பரப்பளவுடைய குளமான குறிச்சி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குறிச்சி குளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை குறிச்சி குளத்தை சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.

தற்போது அதில் ரூ.52 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ள வரைவு திட்ட அறிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தயாரித்துள்ளது, விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “குறிச்சி குளத்தில் நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் தளம் அமைக்கப்படும். சிறுவர்கள் விளையாட ஜப்பான் நாட்டில் உள்ளதுபோல் ‘பிளேயிங் ஜோன்’ ஏற்படுத்தப்படவுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் இதில் அமைக்கப்படும். குளத்தின் மையப்பகுதியில் தீவுகள் அமைக்கப்படும். தீவு பகுதியில் வெளிநாட்டு பறவையினங்கள் வசிப்பதற்கான சூழல் அமைக்கப்படவுள்ளது’’ என்றார்.

Related Stories: