மொடக்குறிச்சியில் ரூ.200 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்

ஈரோடு, ஜன.23: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், பெருந்துறை, ஊத்துக்குளி, சென்னிமலை பகுதிக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க பல்வேறு திட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் குறிப்பிட்ட பகுதியை தவிர, பிற பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வறண்டு, மழை பெய்யாத சூழல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, மேல்நிலை தொட்டி மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் கிடைக்கும் வகையில் மொடக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, காவிரி ஆற்றில் காரணாம்பாளையம் அல்லது கொளாநல்லி ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட உள்ளது. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர், பிரதான குழாய் மூலம் கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி என 3 பகுதியாக பிரித்து, தற்போது தண்ணீர் கிடைக்காத அனைத்து பஞ்சாயத்து உள்ளிட்ட குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வழங்கப்படும். இத்திட்டம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. தற்போது, அதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம், 200 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்து, டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கும். இத்திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 200 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை எடுத்துக் கொள்ள வசதி உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மொடக்குறிச்சி பகுதி மக்கள் முழுஅளவில் பயன்பெறுவர்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Modakurichi ,
× RELATED திருச்செங்கோடு கூட்டு குடிநீர்...