தர்பூசணி வரத்து அதிகரிப்பு

ஈரோடு, ஜன.23:  கோடை கால சீசன் துவங்க உள்ளதையொட்டி ஈரோட்டில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு நேதாஜி மார்க்கெட் பழ மண்டியில் சீசனுக்கு தகுந்தாற்போல பழங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும். தற்போது, பனிக்காலம் முடிந்து கோடை காலம் துவங்க உள்ளதையொட்டி தர்பூசணி வரத்தாகி உள்ளது. இதை வியாபாரிகள் டன் கணக்கில் வாங்கி சென்று ரோட்டோரங்களில் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்பூசணி வியாபாரி பரமசிவம் கூறியதாவது:-

கோடை காலம் என்றாலே வெயிலை தணிக்க மக்கள் அதிகம் விரும்புவது தர்பூசணி பழத்தை தான். ஈரோட்டிற்கு திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர், மதுராந்தகம் போன்ற பகுதிகளில் இருந்து தர்பூசணி கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது தர்பூசணி பழங்களும் நல்ல விளைச்சல் இருப்பதால், ஈரோட்டிற்கு அதிகளவில் வரத்தாகி வருகிறது. ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் தர்பூசணி விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. தர்பூசணி கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தர்பூசணியை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

Related Stories: