×

ரயில்வே நடைபாதை மேம்பாலத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு

ஈரோடு, ஜன.23: ரயில்வே நடைபாதை மேம்பாலத்தில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு சென்னிமலை ரோடு, காசிபாளையம் என்ற இடத்தில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இதை, ரயில்கள் கடந்து செல்லும்போது, சாஸ்திரிநகர் மக்கள் நீண்டநேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வாகன போக்குவரத்திற்கும், நடந்து செல்லவும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அரசு, ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் போக்குவரத்து மேம்பாலமும், நடைபாதை மேம்பாலமும் அமைத்து கொடுத்தது. நடைபாதை மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மேம்பாலத்தில் இரவு நேரத்தில் குடிமகன்கள் கும்பல், கும்பலாக அமர்ந்து மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். செயின் பறிப்பு, வழிப்பறி மற்றும் சமூக விரோத சம்பவங்களிலும் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, நடைபாதை மேம்பாலத்தில் தெரு விளக்கு வசதியை ஏற்படுத்தி, மக்கள் பயன்படுத்தும் படியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : railway corridor ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு