தேர்தல் பயணப்படி வழங்கியதில் பாரபட்சம்

பெருந்துறை, ஜன.23: தேர்தல் பயணப்படி வழங்கியதில் அரசு பாரபட்சமாக செயல்பட்டதாக அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு பயணப்படி வழங்கப்பட்டது. அதில், அரசு வாகன ஓட்டுனர்களுக்கு மிக குறைவான தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட அரசு ஊர்தி ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோர் கூறுகையில்,` ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊரக வளர்ச்சித்துறையைச் சார்ந்த அனைத்து நிலையில் பணி புரியும் அலுவலர்களும், ஓட்டுநர்களும் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர். ஆனால், தேர்தல் ஊதியம் வழங்கும் விஷயத்தில் அரசு ஒருதலை பட்சமாக நடந்துள்ளது.

தேர்தலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு சுமார் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பயணப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊர்தி ஓட்டுநர்களுக்கு  ரூ.4700 மட்டுமே வழங்கி உள்ளனர். இதில், தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊர்தி ஓட்டுனர்கள் இரவு பகல் பாராமல் ஒரு மாதமாக உழைத்ததற்கு அரசு தரும் பயணப்படி மனவருத்தத்தை அளித்துள்ளது. அனைத்து நிலை அலுவலர்களுக்கு வழங்கிய தேர்தல் ஊதியத்தை ஓட்டுனர்களுக்கும் வழங்க  முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்