குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு இஸ்லாமியர்கள் ஒரு நாள் அடையாள நோன்பு

சத்தியமங்கலம், ஜன.23: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, சத்தியமங்கலத்தில் ஜமாத் கமிட்டி மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பில்  ஒரு நாள் அடையாள நோன்பு மற்றும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாதத்தில் ஒரு மாதம் நோன்பிருந்து தொழுகை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் சத்தியமங்கலத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் சார்பில் நேற்று முன்தினம் ஒருநாள் அடையாள நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. அதிகாலை 4.50 மணி முதல் மாலை 6.20 மணி வரை நோன்பிருந்த இஸ்லாமியர்கள் கடைவீதி பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இதையடுத்து, சரியாக  நேற்று மாலை 6.21 மணிக்கு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நோன்பு மேற்கொண்டவர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இதையொட்டி, பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் 6வது நாளாக தர்ணா போராட்டம்