ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

பெருந்துறை, ஜன.23: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அரசு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது. 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பல்வறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி, அரசு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலவலகங்கள் இணைந்து நேற்று பெருந்துறை பனிக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் மருத்துவ முகாமை நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம்  துவக்கி வைத்தார்.

ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் வட்டாரப் போக்குவரத்து அலவலர்கள், அரசு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், இன்ப்ரா டெக்ஸ் நிறுவனங்களின் தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில், பொது மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு,தொண்டை, தோல் நோய் மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக வழங்கினர். மேலும், ரத்தம் மற்றும் சிறுநீர் சர்க்கரை அளவு, ரத்தத்தின் தன்மை, ரத்த வகை கண்டறிதல் மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இதில், 650க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Related Stories: