×

சிவகாசியில் மருதுபாண்டியர் நகர் வழியாக பஸ்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

சிவகாசி, ஜன. 23: சிவகாசியில் மருதுபாண்டியர் நகர் வழியாக காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பஸ்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகாசி நகரில் உள்ள ரதவீதிகளில் வாகனப் பெருக்கத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் மாற்று வழி பாதையை அமைத்தது. இதன்படி சிவகாசி திருத்தங்கல் சாலையில் இருந்து மருதுபாண்டியர் நகர் வழியாக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் கிருதுமால் ஓடை செல்வதால் மருதுபாண்டியர் நகரில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நகரில் உள்ள பஜார் பகுதி மற்றும் திருத்தங்கல் சாலையில் வரும் வாகனங்கள் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இந்த வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால், நகரில் போக்குவர்து நெரிசல் குறைந்தது.

இந்நிலையில், சிவகாசி பஸ்நிலையத்தில் இருந்து விருதுநகர், மதுரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக சென்றால், அதிக நேரமாகும் என அதிகாலை நேரங்களில் மருது பாண்டியர் நகர் வழியாக செல்கின்றன. இதே போன்று விருதுநகர், மதுரையிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பஸ்கள் காரனேசன் விலக்கில் இருந்து பைபாஸ் சாலை செல்லாமல் மருதுபாண்டியர் நகர் வழியாக சிவகாசி பஸ்நிலையம் வந்தடைகிறது.இதனால், அதிகாலை 7 மணிக்கு மேல் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மருது பாண்டியர் நகர் வழியாக பஸ்கள் வந்து செல்வதால், நகரின் மைய பகுதியான தேரடி விலக்கு, முருகன் கோவில் விலக்கு, காமாக் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை தடுக்க காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மருதுபாண்டியர் நகர் வழியாக கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,Marutpandiyar Nagar ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு