×

மூணாறில் துணை ஆட்சியர் அலுவலகத்தை ஆதிவாசி மக்கள் முற்றுகை

மூணாறு, ஜன. 23: மூணாறில் கேரள அரசு தங்களை அவமதிப்பதாகவும், தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் புறக்கணிப்பதாகவும் கூறி குறத்திகுடி ஆதிவாசி சமூகம் தேவிகுளம் துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூணாறில் அடிமாலி கிராம பஞ்சாயத்தில் முதல் வார்டில் அதிகளவில் ஆதிவாசி பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குறத்திக்குடி ஆதிவாசி மக்கள் பல வருடங்களாக இங்கு குடியிருக்கின்றனர்.
இந்நிலையில் குறத்திக்குடி ஆதிவாசி மக்களை கேரள அரசு புறக்கணித்து வருவதாகவும், பழங்குடி மக்களுக்கு கிடைக்கும் நிதியுதவி கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனை வசதி இல்லாமல் பரிதவித்து வருவதாகவும், குடிகளுக்கு செல்லும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. ஆதிவாசி சமூகத்தில் இருந்து குறத்திகுடி ஆதிவாசி மக்களை அரசு புறக்கணிப்பதாகக்கூறி நேற்று தீபிகா இயக்குனர் அருட்தந்தை ஜீனோ தலைமையில் குறத்திகுடி ஆதிவாசி மக்கள் தேவிகுளம் துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் குறத்திக்குடி மக்களை வெறும் ஓட்டு இயந்திரங்களாக அரசு காண்பதாகவும் குறத்திகுடி மக்களுக்கு கிடைக்கும் நிதியில் முறைகேடு நடப்பதாகவும் ஜீனோ குற்றம் சாட்டினார். போராட்டத்தில் குறத்திகுடி ஊர் மூப்பன் மாயாண்டி, மேலும் கோபி, சுதாகரன் போன்றோர் முக்கிய பங்கு வகித்தனர். மேலும் வன விலங்குகளிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், கேரளா அரசு அறிவித்த அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் தங்களை உட்படுத்த வேண்டும் என்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : deputy collector ,Munnar ,
× RELATED மூணாறு அருகே துதிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டி யானை