×

சிங்கம்புணரி பகுதியில் ஆட்கள் பற்றாக்குறையால் அறுவடை பணி பாதிப்பு

சிங்கம்புணரி, ஜன. 23: சிங்கம்புணரி பகுதியில் ஆட்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யும் நெல்லை வாங்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பிரான்மலை, வேங்கைப்பட்டி, எஸ்.வி.மங்கலம், மருதிபட்டி, கண்ணமங்கலப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல நூறு ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இப்பகுதியில் பருவமழை கை கொடுத்ததால் விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் விவசாயப்பணியில் ஈடுபட்டனர். ஐப்பசியில் நெல் நடவு செய்த விவசாயிகள் தை மாதத்தில் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது நெல் அறுவடை செய்ய சேலம், நாமக்கல் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. போதிய இயந்திரம் இல்லாததால், வாடகை உயர்வு, வேலையாட்களுக்கு கூலி உயர்வு, நெல்லுக்கு விலை இல்லாத காரணத்தால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இது குறித்து எல்.விமங்கலம் விவசாயி அழகப்பன் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால் ஆர்வத்துடன் விவசாயப்பணிகளை தொடங்கினோம். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் நெல் அறுவடை செய்யும் நேரத்தில், அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் கூலியாட்கள் மூலம் அறுவடை செய்தால், ஏக்கருக்கு ரூ.2500 முதல் 3000 வரை கொடுக்க வேண்டியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு ஒரு ஏக்கர் வைக்கோல் 5 ஆயிரம் ரூபாய்க்கு விலை போன நிலையில், விளைச்சல் அதிகரிப்பால், வைக்கோல் விலையும் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டு ஒரு மூட்டை நெல் ரூ.1500 வரை வியாபாரிகள் வாங்கினர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் நெல் மூட்டையை ரூ.800 முதல் 1000 வரை மட்டுமே வாங்குகின்றனர். இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சிங்கம்புணரி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் காளையார் கோயில் பகுதியிலும் அறு வடை செய்ய பணியாட்கள் கிடைக்காததால் அறுவடை பாதிப்படைந்துள்ளது.

Tags : Singampunari Area ,
× RELATED சிங்கம்புணரி பகுதியில் விலை போகாத பலாப்பழங்கள்