ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் பள்ளத்தை மறைக்க மணல் மூடை *விபத்து இன்னும் அதிகமாகுது *உடனே சீரமைக்கப்படுமா?

ஒட்டன்சத்திரம், ஜன. 23: ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை பள்ளத்தை மறைக்க வைத்த மணல் மூடைகளால் விபத்துகள் மேலும் அதிகரித்து வருகிறது. இதை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம்- தாராபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன. முக்கியமான இந்த வழித்தடத்தில் ஒட்டன்சத்திரம்- திருப்பூர் இடையே சாலை பணி, பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம்- தாராபும் சாலை வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது இங்குள்ள சாலை நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக இரவுநேரங்களில் பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கி காயமுற்று வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த பள்ளத்தை மூடக்கோரி நெடுஞ்சாலைத்துறையினரிடம் வியாபாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தை மூடாமல் அதை மறைப்பதற்கு சிறு, சிறு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். தற்போது இந்த மணல் மூட்டைகள் வாகனஓட்டிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. மணல் மூட்டையில் ஒளிரும் ஸ்டிக்கர் ஏதும் ஒட்டாததால் இரவுநேரங்களில் வாகனங்கள் இதில் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள பள்ளத்தை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: