×

பொங்கல் பண்டிகை முடிந்ததால் நெல் அறுவடை செய்யும் பணி சுறுசுறுப்பு

சேலம், ஜன.23:  பொங்கல் பண்டிகை முடிந்ததால் தமிழகம் முழுவதும் நெல் அறுவடை சுறுசுறுப்படைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு அரிசியின் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் வெள்ளை பொன்னி, சிவப்பு பொன்னி, ஐஆர் 20, ஐஆர் 50, பச்சரிசி, இட்லி அரிசி உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு, வட மேற்கு பருவமழை நம்பி நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் போதிய மழை இல்லாததால், கடந்தாண்டு நெல் விளைச்சல் பாதித்தது. வழக்கமாக வரவேண்டிய வரத்தில் இருந்து 50 சதவீதம் சரிந்தது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்தது. கடந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஜூலை, ஆகஸ்டில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்தது. விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் ஒவ்வொரு பகுதியிலும் நெல் நல்ல விளைச்சலை தந்துள்ளது. இவ்வாறு விளைந்த நெல்லை ஒரு சில விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அறுவடை செய்தனர். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்ததால் நெல் அறுவடை அதிகரிக்க தொடங்கியுள்ளது.  

இது குறித்து பள்ளிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக நெல் சாகுபடி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு நெல் அறுவடை களைக்கட்டும். கடந்தாண்டு மழை கைக்கொடுத்துள்ளதால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் நெல் நல்ல விளைச்சலை தந்துள்ளது. முற்றிய நெல்லை அறுவடை செய்து, மூட்டையாக கட்டி நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வருகிறோம். மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அரவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு தற்போது 20 முதல் 30 சதவீதம் நெல் செல்கிறது. அங்கு நெல்லை  அரைத்து அரிசியாக்கி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் மார்ச்சில் அரிசி வரத்து 80 சதவீதமாக இருக்கும்.
நடப்பாண்டு நெல் விளைச்சல் நல்லமுறையில் இருப்பதால், கடந்தாண்டை விட, சற்று விலை குறைய வாய்ப்புள்ளது. நடப்பு வாரத்தில் கடந்தாண்டை போல் நடப்பாண்டு அரிசி விலை விற்கப்படுகிறது. பிப்ரவரி, மார்ச்சில் தற்போது விற்கும் விலையில் இருந்து மூட்டைக்கு ₹ 200 முதல் ₹ 400 குறைய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அரிசி வரத்து அதிகரித்தால் மேலும் விலை குறையும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags : festival ,Pongal ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்