×

அரசு தொடக்கப்பள்ளிக்கு வழங்கிய கொண்டைக்கடலையில் வண்டுகளால் அதிர்ச்சி

வாழப்பாடி, ஜன.23:  வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி தொடக்கப்பள்ளிக்கு, மாணவர்களுக்கு வழங்குவதற்காக வந்த கொண்டைக்கடலையில் வண்டு, புழுக்கள் இருந்தது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில்150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ஷகிலாபானு பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில், இப்பள்ளியில் படிக்கும் மாணவியை பார்க்க அவரது தந்தை வடிவேலன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியில், சத்துணவு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட கொண்டடைக்கடலை மூட்டைகளில் வண்டு, புழுக்கள் வைத்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தரம் இல்லாத கொண்டைக்கடலையை பள்ளிக்கு வழங்க கூடாது என தடுத்துள்ளார். ஆனால், அதை மீறி ஊழியர்கள் இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அவர் மக்கள்பாதை வாழப்பாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பள்ளிக்கு வரவழைத்துள்ளார். பள்ளிக்கு வந்த வெங்கடேசன், வண்டுகள் வைத்த கொண்டைக்கடலை குறித்து, தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அப்போது, சத்துணவு அமைப்பாளர் வந்தவுடன், இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் தெரிவிக்க சென்றனர். ஆனால், அதிகாரிகள் இல்லாததால், திரும்பி சென்றனர்.  தரமற்ற கொண்டைக்கடலையை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : elementary school ,government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...