சமூகவியல் துறை சார்பில் பெரியார் பல்கலையில் 3 நாள் பயிலரங்கம்

ஓமலூர், ஜன.23:   சமூகவியல் துறை சார்பில், பெரியார் பல்கலைக்கழகத்தில், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களின் வாழ்க்கை திறன் மேம்பாடு தொடர்பாக 3 நாள் பயிலரங்கம் நடந்தது. இந்திய சமூகவியல் ஆராய்ச்சி மன்றத்தின் உதவியுடன், பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில், பட்டியல் இன பழங்குடி மாணவர்கள் வாழ்க்கைத்திறன் என்ற தலைப்பில், 3 நாள் பயிலரங்கம் நேற்று தொடங்கியது. தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ஆணையத்தின் துணை தலைவர் முருகன், பயிலரங்கை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: நாடு முழுவதிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்கள், வேலை வாய்ப்பு அளிப்பவர்களாக மாறும் வகையில், மத்திய அரசு ₹500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ்டி மற்றும் மகளிருக்கு ₹10 லட்சம் முதல் ₹1 கோடி ரூபாய் வரை எந்தவித பிணையின்றி கடன் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில், 5 சதவீதம் எஸ்.சி, எஸ்டி பிரிவினரிடம் இருந்து பெற வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓசூர் முதல் திருச்சி வரை டிபன்ஸ் காரிடார் அமைக்கும் திட்டத்தை, இப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இந்த பயிலரங்கில், பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல், ஆட்சிக்குழு உறுப்பினர் குமாரசாமி, பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு, பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்களை தெரிவித்து, அவற்றை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினர்.

Related Stories: