×

தகவல் தெரிவித்தப்படி நிலுவைத்தொகை வழங்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 2வது நாளாக பூட்டு போட்ட விவசாயிகள்

வந்தவாசி, ஜன.23: வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று 2வது நாளாக பூட்டு போட்டு விவசாயிகள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு, சேத்துப்பட்டை சேர்ந்த வியாபாரிகள் உரிய தொகையை வழங்கவில்லை. அதன்படி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ₹2 கோடிக்கும் அதிகமாக பாக்கி உள்ளது. நிலுவைத்தொகையை வழங்காமல் அலைக்கழித்து வந்த வியாபாரிகளை கண்டித்து நேற்று முன்தினம் ஒழுங்குமுறை விற்பனை கூட மெயின் கேட்டை பூட்டி, விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். தேசூர் போலீசார் சமரசம் செய்ததின்பேரில், முதல் கட்டமாக நேற்று ₹40 லட்சம் பட்டுவாடா செய்வதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று ₹10 லட்சம் மட்டுமே வியாபாரிகள் பட்டுவாடா செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மாலை 7 மணி அளவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மெயின் கேட்டை மீண்டும் பூட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். டிசம்பர் மாதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, நாளை (இன்று) பணபட்டுவாடா செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : sales outlet ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம்...