தபால்துறை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச தொகை ₹50ல் இருந்து ₹500ஆக உயர்வு

வேலூர், ஜன.23: தபால் சேமிப்பு கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் மினிமம் பேலன்ஸ் ₹50ல் இருந்து ₹500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மினிமம் பேலன்ஸ் செலுத்தாவிட்டால் ₹100 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாடுமுழுவதும் சுமார் பல ஆயிரக்கணக்கான தபால்நிலையங்கள் கிராமப்புறங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 10,200 தபால்நிலையங்கள் இயங்கி வருகிறது. தபால்துறை மூலமாக தபால் சேவை, பார்சல், மணியார்டர், சேமிப்பு கணக்கு உள்ளிட்ட சேவைகள் மற்றும் பாஸ்போர்ட், ஆதார் மையம் போன்ற சேவைகளும் தபால்துறையில் உள்ளது.

முதலில் கையால் எழுதிக்கொடுக்கப்பட்ட சேமிப்பு புத்தகத்தினை மற்றி, வங்கிகளை போல் ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது. சேமிப்பு கணக்கு ெதாடங்க ₹50 மட்டும் செலுத்தினால் போதும், வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ₹50 கொடுத்து வங்கி கணக்கு தொடங்கினர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாக்கெட் மணியை கொண்டு, ₹50 செலுத்தி வங்கி கணக்கு தொடங்கினர்.

இந்நிலையில், தபால் சேமிப்பு கணக்கிற்கு ₹50ஆக இருந்த மினிமம் பேலன்ஸ் திடீரென ₹500ஆக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் ₹100 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தபால்துறையில் பல ஆயிரக்கணக்கான சேமிப்பு கணக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏழை மக்கள் பயன்படுத்தும் தபால் சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: