தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவமனைகளில் விரைவில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம்

வேலூர், ஜன.23: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக டாக்டர்கள், செவிலியர்கள், பார்மசிஸ்டுகள் மற்றும் இதர தொழில்நுட்ப பணியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதில் அடிப்படை மருத்துவ பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை மாநிலம் முழுவதும் வலுத்து வந்தது. மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், காலி பணியிடங்களை நிரப்பாததால் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் இடர்பாடுகளை களைய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்தியாவில் முதல் முறையாக தமிழக சுகாதாரத்துறைக்கு என கடந்த 2012ம் ஆண்டு மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டது. இவ்வாரியம் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 30 ஆயிரம் பேர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2020ம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், உதவி டாக்டர்கள் மற்றும் சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யோகா பிரிவில் உதவி மருத்துவ அதிகாரிகள் தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளியிடப்படும்.

அதேபோல் உதவி சிறப்பு டாக்டர் அறிவிப்பு மே மாதமும், லேப் டெக்னீசியன் கிரேடு-2 அறிவிப்பு ஏப்ரல் மாதமும், இசிஜி டெக்னீசியன் அறிவிப்பு செப்டம்பர் மாதமும், உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட் அறிவிப்பு அக்டோபர் மாதமும், பார்மசிஸ்ட் அறிவிப்பு நவம்பர் மாதமும் அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு மாதங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படுபவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘இதுதொடர்பான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்த்தோம். ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பட்டு வரும் நிலையில் மீதம் இருக்கும் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வௌயிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் 3 ஆயிரம் பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள்’ என்றனர்.

Related Stories: