×

கட்டிட உரிமையாளர், வாடகைதாரர் உரிமை சட்டம் அமல் 9 மாவட்ட சார் ஆட்சியர், உதவி கலெக்டர்களுக்கு பயிற்சி

வேலூர், ஜன.23: தமிழகத்தில் நேற்று முதல் கட்டாயமாகியுள்ள தமிழ்நாடு கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் ஒழுங்குமுறை மற்றும் பொறுப்படைவுகள் திருத்த சட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பில் 9 மாவட்டங்களை சேர்ந்த சார் ஆட்சியர்கள், சப்-கலெக்டர்கள் மற்றும் அவர்கள் நிலையிலான அதிகாரிகளுக்கு வேலூரில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் ஒழுங்குமுறை மற்றும் பொறுப்படைவுகள் திருத்த சட்டம் 2018 நேற்று முதல் மாநிலத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது வாடகை நிர்ணயம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தி, ஒழுங்குமுறையை கொண்டு வரவும், வாடகைதாரர் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தங்களது உரிமைகள் மற்றும் கடமைகளை பின்பற்றவும், இருதரப்பினருக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டம் நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் உரிய எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமின்றி பொதுமக்கள் யாரும் தங்கள் இடங்களை வாடகைக்கு விடவோ அல்லது வாடகைக்கு எடுத்துக் கொள்ளவோ கூடாது. பொதுமக்கள் தங்களது எழுத்துப்பூர்வமான வாடகை ஒப்பந்தங்களை குடிக்கூலி அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். குடிக்கூலி அதிகாரிகள் மேற்படி விவரங்களை பதிவு செய்து, அதற்கான குத்தகை பதிவு எண் வழங்குவர். இவ்வாறு பதிவு செய்யப்படும் ஒப்பந்தங்களின் பேரில் வாடகைதாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக குடிக்கூலி அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இச்சட்டத்தின் பிரிவு 30ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை செயல்படுத்துவதறகாக வேலூர் மாவட்டத்துக்கு துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் குடிக்கூலி அதிகாரிகளாக கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தாலுகாக்களுக்கு வேலூர் உதவி கலெக்டரும், குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் பேரணாம்பட்டு தாலுகாக்களுக்கு குடியாத்தம் உதவி கலெக்டரும் குடிக்கூலி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் உட்பட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உட்பட 9 மாவட்டங்களை சேர்ந்த சார் ஆட்சியர்கள், உதவி கலெக்டர்கள், உதவி கலெக்டர்கள் நிலையிலான அதிகாரிகள் ஆகியோருக்கு இச்சட்டம் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு வேலூரில் நேற்று நடந்தது.

பயிற்சியை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசுகையில், ‘இச்சட்டமானது குடியிருப்பவர், கட்டிட உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும்’ என்றார். கூட்டத்தில் 18க்கும் மேற்பட்ட குடிக்கூலி அதிகாரிகள், உதவி கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Assistant Collector ,Building Owner ,
× RELATED தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் உதவி கலெக்டர் அதிரடி