எருதுவிடும் விழாவுக்கு தடையின்மை சான்று வழங்க மறுத்த பொதுப்பணித் துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

அணைக்கட்டு, ஜன. 23: அணைக்கட்டு அடுத்த ஊசூரில் எருது விடும் விழாவுக்கு தடையின்மை சான்று வழங்க மறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அணைக்கட்டு தாலுகா ஊசூரில் மயிலார் திருவிழாவையொட்டி நேற்று எருதுவிடும் விழா நடக்க ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் மாடுகள் தெருவில் அழைத்து சென்று வழிகாட்டப்பட்டது. அப்போது அங்கு வந்த பொதுப்பணித் துறையினர் போதுமான அளவுக்கு தெருவின் இருபுறங்களிலும் 3 அடுக்கு தடுப்பு கம்புகள் தெரு கடைசி விரை கட்டாததால் தடையின்மை சான்று வழங்க முடியாது என்றனர். அதற்கு கிராம மக்கள், நேற்று வரை ஏதுவும் சொல்லாமல் இப்போது, வெளியூர்களில் இருந்து மாடுகளை அழைத்து வந்த பின் கூறுவது எப்படி? எனக்கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், விடுபட்டிருந்த ஒரு சில இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டதை தொடர்ந்து தடையில்லா சான்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, எருதுவிடும் விழா பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. இதில் ஊசூர், கோவிந்தரெட்டிபாளையம், புலிமேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வீதியில் சீறிப்பாய்ந்து ஓடின. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய மாடுகளை உற்சாகத்துடன் விரட்டினர். ஒவ்வொரு காளைகளும் மூன்று சுற்றுகள் வரை விடப்பட்டது, தொடர்ந்து விழா மதியம் 1.30 மணியளவில் முடிக்கப்பட்டது. ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாமிட்டு மாடுமுட்டியதில் படுகாயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை அளித்தனர். உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, தாசில்தார் முரளிகுமார், துணை தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் நித்யா, விஏஓக்கள் தயாளன், தமிழ் மற்றும் வருவாய் துறையினர் விழாவை கண்காணித்தனர்.

தகவலறிந்த ஆர்டிஓ கணேஷ் விழா நடந்து கொண்டிருக்கும் போது 1 மணியளவில் தெருவில் உரிய ஏற்பாடுகளுடன் விழா நடக்கிறதா என ஆய்வு செய்தார். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: