×

ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு

கடலூர், ஜன. 23: கடலூர் நகர அரங்கு, காவலர் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கடலூர்   மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் சம்பத் நேற்று துவக்கி வைத்தார்அப்போது அவர் பேசுகையில், இப்பயிற்சி, ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக பணியாற்ற  உறுதுணையாக இருக்கும். கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளில் 341 ஊராட்சியில் பெண் ஊராட்சி மன்ற தலைவராகவும், 342 ஊராட்சியில் ஆண் ஊராட்சி மன்ற தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு இணையாக பெண்களும் பதவிகளை வென்றுள்ளனர். ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்குகள், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அனைத்து வீடுகளிலும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்திட வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் அப்பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனரா என கண்காணித்திட வேண்டும்.

 பசுமை பகுதிகளாக நமது மாவட்டத்தை உருவாக்க ஊராட்சிகளில் உள்ள இடங்களை மரக்கன்றுகள் நட்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டி பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  பயிற்சி வகுப்பில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், பிரபாகரன், ஊராட்சி மன்றத்தலைவர்கள், துணைத்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : panchayat leaders ,vice presidents ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்