×

தொடர் விபத்துகளுக்கு காரணமான சாலையோர பூங்காவை அகற்றக்கோரி நூதன போராட்டம்

கடலூர், ஜன. 23: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் படைவீரர் மாளிகை எதிரில் 12 ஆண்டுகளுக்கு முன் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டது. அப்போது கெடிலம் ஆற்றையொட்டி கம்மியம்பேட்டை இணைப்புச்சாலை அமைக்கப்படவில்லை. பூங்காவும் சில ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பின்றி புதர்மண்டி களையிழந்து போனது.அப்பகுதியில் கெடிலம் ஆற்றையொட்டி இணைப்புச்சாலை அமைக்கப்பட்டவுடன்  பிரச்னை ஏற்பட்டது. சாலையோர பூங்காவை ஒட்டி உள்ள சாலை வழியாகவும், அதே போல் கம்மியம்பேட்டை இணைப்புச்சாலை வழியாகவும் வரும் வாகனங்களும் பாதாசாரிகளும் எதிரே யார் வருகிறார்கள் என்பதை பார்க்க முடியவில்லை. இதனால் அந்த இடத்தில் விபத்துகள் ஏற்பட்டன. தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் தொடர் விபத்துகளும் அந்த இடத்தில் அதிகரித்து விட்டது.

எனவே சாலையோர பூங்காவை அகற்ற கோரி கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர், சம்பந்தப்பட்ட சாலையோர பூங்கா அருகில் நூதன போராட்டம் நடத்தினர். அந்த இடத்தில் ஏற்பட்ட விபத்துகளால் காயமடைந்தவர்களை போல சிலர் கட்டுகளுடன் வேடமிட்டிருந்தனர். அவர்களை கயிற்றால் கட்டி  எமன் வேடமிட்ட ஒருவர் அங்கு நின்றிருந்தார். இவர்களை மையமாக வைத்து கூட்டமைப்பினர் முழக்கப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருங்கிணைப்பாளர் வெண்புறாகுமார் தலைமை தாங்கினார். தனியார் பஸ் தொழிலாளர்கள் சங்கம் குருராமலிங்கம், சிவாஜிகணேசன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். வெண்புறா பொதுநலப்பேரவை   சண்முகம், மக்கள் அதிகாரம் ராமலிங்கம், கார்த்திகேயன், முஸ்தபா, சிறுவணிகர் சங்கம் சுகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மணிவண்ணன், தமிழர் கழகம் பருதிவாணன், மேடை கலைஞர்கள் சங்கம் மதிவாணன், திராவிடர் கழகம் மாதவன், பஸ் தொழிலாளர் சங்கம் விஜி,பாபு உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : roadside park ,accidents ,series ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக் தொடர்:...