×

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டு வரவேண்டும்

விழுப்புரம், ஜன. 23: தற்போது நடைபெற உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் விழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட்டை கொண்டு வரவேண்டும். வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டு மெனவும் விழுப்புரத்தில் நடந்த கலந்துரையாடலில் பொதுமக்கள், வணிகர்கள் வலியுறுத்தினர்.மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பி ரவிக்குமார் தலைமையில் விழுப்புரத்தின் எதிர்ப்பு குறித்து பொதுமக்கள், வணிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது. ரவிக்குமார் எம்பி தலைமை தாங்கினார். பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் சிறப்புரையாற்றினார். மருந்து வணிகர் சங்கம் ராமகிருஷ்ணன், ஆடிட்டர் குலோத்துங்கன், சேம்பர்ஆப் காமர்ஸ் பிரேம், எஸ்ஆர்எம்யூ செயல் தலைவர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழுப்புரத்தின் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் வாழ்க்கைதரம் உயர்வதற்கும் என்னென்ன திட்டங்கள் தேவை என்பது குறித்து பேசினார். அரிசி ஆலைசங்கத்தலைவர் குபேரன் பேசுகையில், விழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டுவர வேண்டும்.

சென்னைக்கு அருகாமையில் உள்ள மிகப்பெரிய நகரமான விழுப்புரத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வரவேண்டும். அதேபோல் அரிசி ஆலைகள்திறம்பட செயல்படவும் மத்தியபட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். எஸ்ஆர்எம்யூ செயல் தலைவர் பழனிவேல் பேசுகையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் விழுப்புரம் ரயில்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ரயில்நிலையத்திற்கு வரும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். திருச்சி, சேலம் போன்ற கோட்டத்திற்கு மட்டும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருச்சி கோட்டத்தில் முக்கிய ரயில்நிலையமாக உள்ள விழுப்புரத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதில் பயணிகளுக்கு தேவையான பேட்டரி கார்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் 6 பிளாட்பாரங்கள் உள்ளதால் சுரங்கப்பாதை அமைக்கவும் வலியுறுத்த வேண்டும். அதேபோல் விழுப்புரத்திலிருந்து சென்னை, திருவண்ணாமலை, விருத்தாசலம், மயிலாடுதுைற மார்க்கத்தில் சென்னை மாநகரத்தில் இயக்குவதைப்போன்றே மின்சார ரயில் இயக்கிடவேண்டும்.இந்த பட்ஜெட்டில் மின்சார ரயில் இயக்குவதற்கான அறிவிப்பு இடம் பெற வேண்டும். அதேபோல் விழுப்புரத்தில் மருந்து வணிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். தற்போது ஆன்லைன் மூலம் நடைபெறும் மருந்து விற்பனையால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் சீட்டு கொடுத்து பரிந்துரை இருந்தால் மட்டுமே மருந்து விற்பனை செய்ய வேண்டுமென் என்ற விதிமுறை இருந்தும் அனுமதியில்லாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை நடந்து வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும். அதேபோல் எலக்ட்ரானிக் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதை தடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென கூறினார். விழுப்புரத்தில் நகைத்தொழிலாளர்கள் அதிகளவு உள்ளார்கள். அவர்களின் வாழ்க்கைதரம் பாதுகாக்கவும், தொழிலை காக்கவும் மத்திய அரசு கடனுதவி வழங்கிட வலியுறுத்த வேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் சிவகங்கை மாவட்டத்தில் நகை தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனைகளுமின்றி தலா ரூ.1 லட்சம் வழங்கினார். அதேபோல் விழுப்புரத்தில் உள்ள நகைதொழிலாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் நிபந்தனையின்றி வழங்கிட வேண்டுமென நகைத்தொழிலாளர்கள் வலியுறுத்தினர். கருத்துக்களையும், கோரிக்கைகளையும் மனுவாக நிதியமைச்சரிடம் கொடுத்து பட்ஜெட்கூட்டத்தொடரில் விழுப்புரத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ரவிக்குமார் எம்பி கூறினார்.

Tags : Chipcat ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...