ஏஎப்டி பஞ்சாலை மூடப்படுகிறது

புதுச்சேரி, ஜன. 23: பிரெஞ்சு ஆட்சி காலத்தில் 1898ம் ஆண்டு முதன்முதலாக ரோடியேர் மில் துவங்கப்பட்டது. பின்னர் ஜாட்டியா என்பவரால், தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வந்த மில்லில், உரிமைகளை கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுப்பான ஜாட்டியா மில்லை மூடிவிட்டார். இதனால் தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியால் வாடியது. மில்லை திறக்க பல கட்ட போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி முதல் புதுச்சேரி நெசவாலை கழகத்தின் கீழ் ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல் நிர்வாகம் இயங்கி வந்தது. முதலியார்பேட்டையில் ஏ மற்றும் பி யூனிட்டுகளும், அய்யங்குட்டிபாளையத்தில் சி யூனிட், மேட்டுப்பாளையத்தில் ஹெச் யூனிட், தட்டாஞ்சாவடியில் பி5 ஆகிய யூனிட்டுகளை உள்ளடக்கியது. இந்தியாவிலேயே பஞ்சு நூலாகி  துணியாக நெய்யப்பட்டு சாயம் ஏற்றும் வசதி கொண்ட ஒருங்கிணைந்த மில்லாக  செயல்பட்டு வந்தது. இங்கிருந்து  ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக  சீர்கேடுகள், முறைகேடுகள், நவீன காலத்துக்கு ஏற்ப இயந்திரங்கள், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தாது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர் நஷ்டத்தை  சந்தித்து வந்தது.  ரூ. 800 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதால், தொடர்ந்து  பஞ்சாலையை நடத்த முடியாத நிலை உருவானது.  மில்லை நவீனப்படுத்தி இயக்க  வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதற்கிடையே 2011ம் ஆண்டு தானே புயலால் ஏ மற்றும் பி  யூனிட்டுகள் கடுமையாக சேதமடைந்து மூடப்பட்டது. இதனால் அங்கு வேலை செய்த  தொழிலாளர்களுக்கு லே-ஆப் அடிப்படையில் பாதி சம்பளம் வழங்கப்பட்டது.
Advertising
Advertising

இதற்கிடையே தொழிலாளர்கள் தன் விருப்ப ஓய்வு திட்டத்தையும் (விஆர்எஸ்)அரசு அறிவித்தது.  அதன்படி சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு அதற்கான இழப்பீட்டு தொகை  வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 619 தொழிலாளர்கள்  பணியில் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆலையின் மேலாண் இயக்குனர் பிரியதர்ஷினி  வெளியிட்டுள்ள நோட்டீசில்,  தொழில் தவா சட்டம் 1947ன் படி  வரும் ஏப்ரல் மாதம் 30ம்தேதி முதல் ஏஎப்டி மில் நிரந்தரமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு தொழில் தவா சட்டம்  25( என்) கீழ் இழப்பீடை பெற்றுக்கொள்ளலாம் எனவும்  கூறப்பட்டுள்ளது.   இத்தகவலை  தொழில்துறை செயலருக்கு கடிதம் மூலம் கடந்த 21ம் தேதி மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த தொழிற்சங்கத்தினர்  எம்எல்ஏக்கள் அன்பழகன், சாமிநாதன் ஆகியோர் தலைமையில் சட்டசபை வளாகத்தில் நாராயணசாமியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது ஏஎப்டி மில்லை தொடர்ந்து நடத்த வேண்டும்.  விஆர்எஸ் திட்டத்தின் படிதான் அனைத்து தொழிலாளர்களையும் அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்  கூறுகையில்,  ஏஎப்டி மில் தொழிலாளர்களுக்கு 13 மாத  சம்பளம் வழங்க  மானியம் கேட்டு  கவர்னருக்கு கோப்புகள் அனுப்பினோம். ஆனால் மில்லை மூடினால்தான் நிதி ஒதுக்குவேன் என கவர்னர் தெரிவித்து விட்டார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏஎப்டி தொழிலாளர்களுக்கு தன் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து, பணிபயன்களை கிடைக்க செய்வதே அரசின் நிலைப்பாடு, இந்த விவகாரத்தில் கவர்னருக்கும், தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இது தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு இன்னமும் பதில் வரவில்லை. இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி இந்த மில்லை மூட  வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்து, அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்து, இந்த நோட்டீசை வெளியிட்டுள்ளார். மில்லை மூடுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை,  அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவைத்தான் செயல்படுத்துவோம். இந்த விவகாரத்தில் கவர்னரின் உத்தரவை செயல்படுத்த முடியாது என கடிதம் அனுப்புவேன் என்றார். புதுவையில் 122 ஆண்டுகளாக இயங்கி வந்த பழமையான ஏஎப்டி பஞ்சாலை வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி முதல் மூடப்படும் என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: