சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 13 ஆண்டு சிறை

காரைக்கால், ஜன. 23:  வீட்டில் ஒளிந்து விளையாடிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). மீன்பிடி தொழில் செய்துவரும் இவர், கடந்த 24-4-18 அன்று வீட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டு சிறுமிகள் ஆறுமுகத்தின் வீட்டில் ஒளிந்து விளையாடினர். அப்போது, 11 வயது சிறுமியை, ஆறுமுகம் வாயை பொத்தி பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து, மற்றொரு சிறுமியை ஆறுமுகம் கையை பிடித்து இழுத்துள்ளார். சிறுமிகள் கூச்சலிடவே, ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து, சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர். சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்தார் மற்றும் நிரவி காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சைல்டுலைன் விசாரணைக்கு உட்படுத்தினர். பின்னர், தலைமறைவான ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு, காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று  விசாரணை முடிந்ததையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு சிறுமியின் கையை தவறான நோக்கில் பிடித்து இழுத்த குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்தார். மேலும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

>