×

சுசீந்திரம் தாணுமாலயன் சத்திரத்தை திறந்து விட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் இந்து அமைப்புகள் மனு

நாகர்கோவில், ஜன.23: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் குமரி மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா, மாவட்ட தலைவர் குமாரசாமி, நகர செயலாளர் ரமேஷ், விஷ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன், மாவட்ட செயலாளர் கார்த்திக், பாஜ மண்டல தலைவர் நாகராஜன், நயினார் உள்ளிட்டோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் அருகே புறம்போக்கு நிலத்தில் தாணுமாலயன் சத்திரம் அமைந்துள்ளது. இந்த சத்திரம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு தீர்த்த யாத்திரை வரும் பக்தர்கள் தங்குவதற்காகவும், அவர்களது பயன்பாட்டிற்காகவும், திருவிதாங்கூர் மன்னர்களால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த சத்திரம் ஆகும். தற்போது சத்திரம் புறம்போக்கு நிலம் மற்றும் அதில் அமைந்துள்ள தாணுமாலயன் சத்திரம் ஆகியவற்றினை சுசீந்திரம் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தினர் சட்டவிரோதமாக ஆக்ரமிப்பு செய்து தங்களது தலைமை அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர்.  நிலக்கொடை அளிக்கப்பட்ட சத்திரங்கள் சரியான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றவா என்பதையும், பயணம் செய்பவர்களின் வசதிக்காக பணியாளர்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் அவ்வப்போது கேட்டறிந்து கொள்வது மாவட்ட கலெக்டரின் கடமையாகும். சாதாரணமாக சத்திரங்களை அரசாங்க அலுவல் சம்பந்தமாக உபயோகிக்கலாகாது.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு நெடுந்தொலைவில் இருந்து வரும் யாத்ரீகர்கள் அங்கு தங்கி இளைப்பாற போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சாலையோரங்களில் தங்கி ஓய்வெடுத்து செல்கின்றனர். மேலும் சமீப காலமாக சபரிமலை தர்மசாஸ்தா கோயிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக சுசீந்திரம் கோயிலுக்கு வருகின்றனர்.  இவர்கள் சுசீந்திரத்தில் தங்கி இளைப்பாற போதிய வசதிகள் இல்லாமல் சாலையோரங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்தும், அல்லல்பட்டு மன வேதனையுடன் செல்கின்றனர். எனவே சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சத்திர ஆக்ரமிப்புகளை  அகற்றி சத்திரத்தை யாத்ரீகர்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் சத்திரமாக செயல்பட செய்ய உரிய ஆணைகளை உடன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை
நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: கன்னியாகுமரி துணை மின்நிலையத்தில் வருகிற 24ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி வழுக்கம்பாறை, கீழ மணக்குடி அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ேகாழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

Tags : Hindustan ,Office ,Collector ,
× RELATED சில்லி பாயின்ட்…