×

ஊராட்சி தலைவர்கள்,துணைத்தலைவர்கள் மக்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும்

நாகர்கோவில், ஜன.23: ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் மக்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கூறினார். குமரி மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி கூட்டம் நாகர்கோவிலில் ரோட்டரி கம்யூனிட்டி சென்டர் அரங்கில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஊராட்சி தலைவர் தகுதி என்பது மிக முக்கியமானதாகும். நேரடியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசுக்கு சொல்கின்ற அதே வேளையில் குறைகளை நிறைவேற்றுகின்ற பதவி ஆகும்.  மக்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளுக்கு முடிவு எடுக்கவும், தீர்வு காணவும் இயலும். கிராம சபை என்னும் அதிகாரம் ஊராட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பான ஒன்றாகும். ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் மக்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும். குறைகள் என்னென்ன உள்ளன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாவட்ட அளவில் அதிகாரிகளால் புரட்சி ஏதும் செய்ய இயலாது. ஊராட்சி தலைவர் பதவியும் ஒரு அதிகாரிக்கு இணையானது. எந்தெந்த திட்டங்கள் ஊராட்சிகளுக்கு பொருந்தும், செயல்படுத்த முடியும் என்பதை அறிந்து எந்த துறை சார்ந்த திட்டமாக இருந்தாலும் அதனை உங்கள் பகுதியில் செயல்படுத்திட தயார் செய்ய வேண்டும்.

கிராம சபை கூட்டங்கள் இதுவரை அதிகாரிகளால் ஒரு சில இடங்களில் பெயரளவிற்கு நடந்திருக்கலாம். இனி கிராம சபைகளை சம்பிரதாயத்துக்காக நடத்தாமல் அதற்கான உரிய முக்கியத்துவத்துடன் நடத்த வேண்டும். ஊராட்சி தலைவர்கள் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் உங்களை நினைவில் வைத்து கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பயிற்சி தொடர்பான கையேட்டையும் கலெக்டர் வெளியிட்டார். முதல் கட்டமாக நேற்று அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு பயிற்சி நடந்தது. குமரி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செய்யது சுலைமான் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட் தாஸ், மாநில வாழ்வாதார திட்ட இயக்குநர் பிச்சை, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் (தணிக்கை) ஜார்ஜ் ஆன்டனி மைக்கேல் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாம் மாலை 5 மணி வரை நடந்தது. இன்று தக்கலை, திருவட்டார், மேல்புறம், முன்சிறை, கிள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Tags : Panchayat leaders ,vice-presidents ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்