×

நாகர்கோவிலில் சாலை ஓரத்தில் நின்ற டாரஸ் லாரியில் பயங்கர தீ பெட்ரோல் பங்க் தப்பியது போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில், ஜன.23 : நாகர்கோவிலில் நேற்று காலை சாலை ஓரத்தில் நின்ற லாரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்டதால், பெட்ரோல் பங்க் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தப்பின. நாகர்கோவில் ஒழுகினசேரி அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரில், நேற்று காலை டாரஸ் லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதன் டிரைவர், ரோட்டோரமாக லாரியை நிறுத்தி விட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்று இருந்தார். அப்போது திடீரென லாரியின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிந்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிறிது தாமதித்து இருந்தாலும் கூட, லாரி முழுவதும் எரிந்து இருப்பதுடன், எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கும் சேதம் ஏற்பட்டு இருக்கும். மேலும் அந்த பகுதியில் ஏராளமான கார்கள் நின்றன. டீசல் டேங்க் வெடித்து இருந்தால் கார்களும் எரிந்து இருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. பேட்டரி கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்குமா? வேறு காரணங்கள் இருக்குமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த இடம் நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை ஆகும். காலை வேளை என்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. தீ விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...