கருங்குளம் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் தடுப்பு வேலி அமைக்கும் பணி மும்முரம்

மணப்பாறை, ஜன.22: வையம்பட்டி அருகே கருங்குளம் ஜல்லிக்கட்டு வரும் குடியரசு தினமான 26ம் தேதி நடக்கவிருப்பதால் வாடிவாசல் மற்றும் காலரி, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளம் ஜல்லிக்கட்டு குடியரசு தினமான வருகிற 26ம் தேதி நடக்க உள்ளது. புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக புனித இன்னாசியார் திடலில் விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு குழு சார்பில் கடந்த 18ம் தேதி கால்கோல் நடப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் திடலில் வாடிவாசல், பந்தல், தடுப்பு வேலிகள், காளை பரிசோதனை செய்யப்படும் பகுதிகளை அமைக்கும் பணி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் மும்முரமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து புனித இன்னாசியார் திடலில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு நேற்று டோக்கன் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட மாடுகளுக்கு இன்று வழங்குகின்றனர். தொடர்ந்து நாளை 23ம் தேதி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதன் பின்னர் வரும் சனிக்கிழமை (25ம் தேதி) மாலை பொங்கல் விழா மற்றும் இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் புனித வனத்து அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்த மறுநாள் காலை 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிகட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இத்தகவலை விழா குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: