குழாய்கள் சேதத்தால் குடிநீர் வீணாகி குட்டை போல் ேதங்கி நிற்கும் அவலம்

மணப்பாறை, ஜன.22: மணப்பாறை குளித்தலை சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதத்தால், 5 இடங்களில் தண்ணீர் வீணாகி குட்டை போல தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வேதனையடைந்து வருகின்றனர். மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 88 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் விதமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் வரும் வழிகளில் உள்ள பல கிராமங்களுக்கு இந்த குடிநீர் வரப்பிரசாதமாக இருந்தது. தொடக்க காலங்களில் பராமரிப்பு செய்வதற்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டு அதற்கான செலவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அவர்களுக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. நகர் பகுதிகளில் கண்ட இடங்களில் குழாய்கள் சேதமடைந்து மாதக் கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. புறநகர் பகுதிகளிலும், குளித்தலை சாலைகளில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்கள் சேதமடைந்து சாலை, வயல்கள் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் குட்டை போல தேங்கி வருகிறது.

குளித்தலை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், ஐயப்பன் கோவில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சேதமடைந்த குழாய்களில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலைகளில் ஓடுகிறது. சாலையில் தேங்கும் தண்ணீர் சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவி வருகிறது. மேலும் இனி வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வழியுள்ள நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த குழாய்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்தால்தான் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி இட முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்தின் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பராமரிப்பு செலவு ஒதுக்கீடு இல்லாததால் வேலை செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: