×

திருச்சி மாவட்டத்தில் 60 சதவீத மானியத்தில் சூரிய சக்தி உலர்ப்பான்கள்

திருச்சி, ஜன.22: திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் சூரிய சக்தி உலர்ப்பான்கள் பெறுவதற்கு தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு 60 சதவீதம் மானியத்தில் “சூரிய சக்தியில் இயங்கும் உலர்ப்பான்கள்” வழங்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களை சோலார் உலர்ப்பான்கள் மூலம் உலர்த்தி, அதனை மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி; விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறும் வகையில்    வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தமிழக அரசு சூரிய சக்தியில் இயங்கும் உலர்ப்பான்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.2019-20ம் ஆண்டில், இப்புதிய திட்டத்தில் உத்தேசமாக 400 சதுர அடி பரப்பளவு உள்ள கூடாரத்தில் சுமார் 1 டன் எடையுள்ள மிளகாய் பழத்தை காய வைத்து கொள்ளலாம். மேலும் செடியில் இருந்து பறித்த மிளகாய் பழங்களை இக்கூடாரத்தில் வைத்தால் 2 நாட்களில் முழுவதும் காய்ந்து விடும். 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி பரப்பளவில் இக்கூடாரத்தை அமைத்துக் கொள்ளலாம். மேலும் 400 சதுர அடி உள்ள இடத்தில் இந்த சூரிய உலர்த்தி கூடாரத்தை அமைக்க சுமார் ரூ.3.00 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது.

1000 சதுர அடியில் இந்த கூடாரத்தை அமைக்க சுமார் ரூ.7 லட்சம் வரை செலவாகிறது. இதில் டிரே இல்லாமலும் அதிக செலவில்லாத பொருட்களை கொண்டு தரை தளத்தினை அமைத்து இக்கூடார அமைப்பின் செலவை குறைத்துக் கொள்ளலாம். இந்த கூடாரத்தை அமைக்க செலவாகும் தொகையில் சிறு குறு மற்றும் ஆதி திராவிடர் பெண் விவசாயிகளுக்கு 60 சதவீத தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இதர விசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அதிக பட்சமாக ரூ.30.50 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள தனிப்பட்ட விவசாயிகள் அல்லது சொசைட்டி விதியின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின குழுக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
எனவே, சோலார் உலர்த்திகள் அமைக்க விருப்பமுள்ள அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, எண் 2, ஜெயில் கார்னர், திருச்சி அலுவலகத்திலும் முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, 18, கண்ணதாசன் தெரு, முசிறி அலுவலகத்திலும் லால்குடி, புள்ளம்பாடி மற்றும் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, கணபதி நகர், வடக்கு விஸ்தரிப்பு, தாளக்குடி அஞ்சல், லால்குடி அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களது பெயரினை பதிவு செய்து மூதுரிமை பெற்று பயன் அடையுமாறு திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags : Trichy District ,
× RELATED திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில்...