கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

தா.பேட்டை, ஜன.22: தா.பேட்டை கடைவீதியில் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வோர் மீதும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், சிசிடிவி கேமராவை காவல்துறை சார்பாக பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி தாலுகா தா.பேட்டை கடைவீதி நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் வாகனங்களும் துறையூர் பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி செல்லும் வாகனங்களும் முசிறியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களும் இச்சாலைகளில் அதிகம் பயணிக்கின்றது. நாமக்கல் மெயின் ரோடு கடைவீதியில் குறுக்கிடுவதால் இரவு நேரங்களிலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து இருப்பது வழக்கம். எனவே சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் கனரக வாகனங்களையும், இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும், காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா வைப்பது அவசியம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தா.பேட் டை சேர்ந்த கார்த்தி என்பவர் கூறுகையில், தா.பேட்டை கடைவீதி வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பதன் மூலம் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகனங்களையும் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களையும் எளிதாக கண்டறிய இயலும். மேலும் பண்டிகை நேரங்களில் கடைவீதியில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோத நபர்களின் நடமாட்டத்தை கண்டறியவும் சிசிடிவி கேமரா அமைப்பது உதவியாக இருக்கும். எனவே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தா.பேட்டை கடைவீதியில் கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காவல்துறை வசம் உரிய நிதி இல்லாத சூழலில் நன்கொடையாளர்கள் உதவியுடன் சிசிடிவி கேமரா அமைப்பது உடனடி சாத்தியமாகும் என்று கூறினார்.

Related Stories: