×

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடாததால் மின்விநியோகம் குடிநீர் நிறுத்தம் கிராம மக்கள் போலீசில் புகார்

திருச்சுழி, ஜன. 22: உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டு போடாததால், குடிநீர், மின்விநியோகத்தை நிறுத்துவதாக கிராம மக்கள் திருச்சுழி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். திருச்சுழி அருகே சேதுபுரம் ஊராட்சியில் ரெங்கையன்பட்டி, சேதுபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஊராட்சி தலைவர் பதவி தேர்தலுக்கு ரெங்கையன்பட்டியைச் சேர்ந்த பாண்டியலட்சுமி, அதே ஊரைச் சேர்ந்த மலைச்செல்வி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், பாண்டியலட்சுமி 27 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சேதுபுரம் கிராமத்தில் மலைச்செல்விக்கு அதிகமான ஓட்டுகள் விழுந்ததால், அதை மனதில் வைத்து கொண்டு சேதுபுரம் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் மற்றும் மின்விநியோகத்தை நிறுத்தும் செயல்களில் ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் ஈடுபடுவதாக, சேதுபுரம் கிராம மக்கள் திருச்சுழி போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்களுக்கு எதிராக எந்தவித செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என பாண்டியலட்சுமியின் கணவர் மலைராஜை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், தண்ணீர் திறக்கும் ஆரோக்கியராஜ் மற்றும் திருமுருகன் ஆகியோர் மீண்டும் மின்விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை நிறுத்துவதாக திருச்சுழி காவல்நிலையத்தில் ஆண், பெண்கள் உட்பட ஏராளமானோர் நேற்று புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...