×

சிவகங்கை மாவட்டத்தில் நகை, பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை, ஜன. 22: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட நகை, பயிர்க்கடன் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2014ல் ஓரளவு மழை பெய்த நிலையில் 2015ல் வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயத்திற்கான போதிய மழை பெய்யவில்லை. மழை இல்லாமல் சுமார் 70 சதவீத பயிர்களும், குலைநோய் தாக்குதலால் 20 சதவீத பயிர்களும் பாதிக்கப்பட்டன. 2016ம் ஆண்டும் மழை இல்லாமல் வறட்சியால் நூறு சதவீத பாதிப்பு ஏற்பட்டது. 2017ம் ஆண்டில் 72 ஆயிரத்து 153 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்த நிலையில் முழுமையாக அனைத்து பயிர்களும் கருகின. 2018ம் ஆண்டும் மாவட்டம் முழுவதும் நூறு சதவீதம் விளைச்சல் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 2018ம் ஆண்டிற்கான பாதிப்பு சதவீதத்தில் குளறுபடி நிலவுவதால் இழப்பீடு வழங்கலில் குளறுபடி ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாமல் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் போதிய இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. ஏராளமான விவசாயிகளுக்கு ரூ.10 லிருந்து ரூ.100 வரை கூட இழப்பீடாக வழங்கப்பட்டது.

விவசாயிகள் கடந்த சில ஆண்டாக கூட்டுறவு வங்கி, கிராம வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன் வாங்கினர். வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். தொடர்ந்து சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை கணக்கில்கொண்டு கூட்டுறவு வங்கி மட்டுமின்றி பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அனைத்து விவசாயிகள் பெற்ற பயிர், நகைக்கடன் உள்ளிட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘தொடர்ந்து சில ஆண்டுகளாக வறட்சியால் விவசாயத்திற்கு செலவிட்ட தொகை அனைத்தும் வீணானது. நீண்ட காலத்திற்கு பிறகு 2019ம் ஆண்டு தான் விளைச்சலுலுக்கான மழை பெய்துள்ளது. ஆனால் ஆண்டுதோறும் ஒரே மாதிரியான விவசாயம் இல்லாததால் பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்காக வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. கிராம வங்கியில் விவசாய நகைக்கடனை ஒரு வருடத்தில் திரும்ப செலுத்தவில்லையெனில் வட்டிக்கு, வட்டி போடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கே கூடுதல் சுமை. எனவே விவசாயத்திற்கான கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : jewelery ,Sivaganga district ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை