×

நிரந்தரமாக செவிலியர் இல்லாமல் அவசர சிகிச்சை பெற முடியவில்லை நம்புதாளை மக்கள் வேதனை

தொண்டி, ஜன.22:  நம்புதாளையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இல்லாமல் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். நிரந்தரமாக செவிலியர் நியமிக்க  இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மீனவர்கள்,விவசாயிகள் மற்றும் நடுத்தர தட்டு மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதி மக்களுக்கென இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பணியில் இருந்த செவிலியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றலாகி சென்று விட்டார். பல மாதங்களாக இங்கு செவிலியர் இல்லாமல் உள்ளது. எப்போதாவது செவிலியர் வருவதும் சிகிச்சை அளிப்பதும் வாடிக்கையாகி விட்டது. இரவு நேரத்தில் நோயாளிகள் பாடு பெரும் கஷ்டமாகி விட்டது. நிரந்தர செவிலியர் நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல் லை. தனியார் மருத்துவமனைக்கு செல்வதால் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் கூறியது, அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக நம்புதாளை உள்ளது. ஆனால் இங்கு அரசு மருத்துவர் என யாரும் இல்லை. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தொண்டி பகுதியில் அதிகமான பிரசவம் பார்த்தாக தெரிகிறது. ஒருவர் மாற்றலாகி போனால் இன்னொருவரை நியமிக்காமல் ஏன் இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை. கர்ப்பிணி பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இரவு நேரத்தில் நோயாளிகளின் நிலை கவலை அளிக்கிறது. அவ்வப்போது வந்து செல்லும் செவிலியரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்றனர்.

Tags : nurse ,
× RELATED சைரன் விமர்சனம்