×

திருப்புவனத்தில் முதன்மை செயலாளர்கள் ஆய்வு புதிய இடத்தில் வாரச்சந்தை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்புவனம், ஜன. 22: திருப்புவனம் வாரச்சந்தை பிரச்சனை தொடர்பாக நேற்று தமிழக அரசின் முதன்மை செயலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்புவனத்தை சுற்றிலும் 45 ஊராட்சிகளை சேர்ந்த 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் வாரம் தோறும் செவ்வாய் கிழமை திருப்புவனத்தில் நடைபெறும் காய்கறி மற்றும் கால்நடை சந்தையில் விளைவித்த பொருட்கள் மற்றும் ஆடு, கோழிகளை விற்பனை செய்துவிட்டு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.  திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் வாரம்தோறும் சந்தை நடந்து வந்தது. இந்த இடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. சந்தை நாளன்று இருபுறமும் நடந்து வந்த வாரச்சந்தையால் விபத்து அபாயம் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்தாண்டு ஜுலை மாதம் சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்தில் வாரச்சந்தை இடம் மாற்றப்பட்டு நடந்து வந்தது. பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி செய்து தரப்பட்டது.

புதிய இடம் குறித்து அருப்புக்கோட்டையை சேர்ந்த சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றனர். இதனையடுத்து அரசு முதன்மை செயலர்கள் ஆய்வு செய்ய கோர்ட் உத்தரவிட்டதையடுத்து நேற்று தமிழக அரசின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலர் ஹர்மந்தர் சிங், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல் மிஸ்ரா, ஆணையர் பாஸ்கரன், பேரூராட்சி இயக்குநர் பாஸ்கரன், நிதித்துறை கூடுதல செயலர் கிருஷ்ணன் கலெக்டர்கள் ஜெயகாந்தன்(சிவகங்கை), கண்ணன்(விருதுநகர்) மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். எம்எல்ஏ  நாகராஜ் உள்ளிட்டோர் சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்தில் வாரச் சந்தையை தொடர்ந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனைதொடர்ந்து ஆய்வு செய்த குழுவினர் ரோட்டில் நடந்த வாரச்சந்தையையும் ஆய்வு செய்ததுடன் வியாபாரிகள், பொதுமக்களிடமும் நேரில் கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் தரப்பில் புதிய இடத்தில் வாரச்சந்தையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றனர்.

Tags : General Secretaries ,Thirupavanam ,
× RELATED பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண...