×

20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கிராமச் சாலையை சீரமைக்க கோரிக்கை

சாயல்குடி, ஜன. 22:  கடலாடி அருகே கிடாக்குளம், புரசங்குளம் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், புரசங்குளம், கிடாக்குளம், கிடாக்குளம் கொட்டகை, தேராங்குளம், கடையாக்குளம் கிராமத்தில்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இங்கு கடலாடி, மேலச்செல்வனூர்  சாலை சந்திப்பிலிருந்து பிரிந்து  5 கிராமத்திற்கு செல்வதற்கு சாலை உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை என்பதால் இச்சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஜல்லி கற்கள்  பெயர்ந்து போய் கூர்மையாக கிடப்பதால் வாகனங்களின் டயர்களை பதம்பார்த்து வருகிறது. இங்கு பஸ் போக்குவரத்து வசதியில்லாததால் சுமார் 2 முதல் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிழக்கு கடலாடி சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்லும் அவலநிலை இருப்பதாக கிராமமக்கள் கூறுகின்றனர். மேலும் கண்மாய் கரையோரம் செல்லும் பிரதான சாலை, தெருக்களில் போடப்பட்ட சாலை ஆகியவை சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. மழை காலங்களில் பெய்யும் மழை தண்ணீர் அதில் தேங்கி கிடப்பதாலும். தடுப்புச்சுவர் இல்லாததால் கரை மண் கரைந்து சாலையில் விழுவதாலும், நடந்து கூட செல்ல முடியவில்லை என கூறுகின்றனர்.

மேலும் தெருச்சாலையில் கிடக்கும்  தண்ணீர் ஓட வழியில்லாமல் வீடுகளுக்கு முன் தேங்கியே கிடந்து கழிவுநீராக மாறிவிடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. கிராமத்தில் குடிதண்ணீர் பிடிக்கும் இடம், பள்ளி, கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாக செல்லும் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கும். இக்கிராமங்களுக்கு முறையான சாலை வசதியில்லாததால் ஆட்டோ கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அத்தியாசசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்கும், மாணவர்கள் மேல்நிலை கல்வி பயில்வதற்கு வெளியூர்களுக்கு செல்ல சிரமமாக உள்ளதாக புகார் கூறுகின்றனர். எனவே இந்த 5 கிராமத்திற்கும் சாலை வசதியை அமைத்து தர  கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village road ,
× RELATED கொசூர் கிராம சாலையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு