பஸ், ரயில் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி

புதுச்சேரி, ஜன. 22:  கவர்னர் கிரண்பேடி உத்தரவின்பேரில் புதுச்சேரி பஸ், ரயில் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  புதுச்சேரி ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமென கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டிருந்தார். இத்தகவலை அவர் நேற்று தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டிருந்தார். இங்கு பணியில் இருப்பவர்களை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டுமெனவும், இதை அந்த அறையின் தலைவரான பாஸ்கர் உறுதி செய்ய வேண்டுமெனவும், இரவு நேரத்தில் பயணிகளை தனியாக விட முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

Advertising
Advertising

 கவர்னர் கிரண்பேடியின் இந்த உத்தரவு உடனடியாக பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே புதுவை புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு உருளையன்பேட்டை ஏஎஸ்ஐ தலைமையில் 2 ஆண் காவலர், ஒரு மகளிர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கவர்னரின் உத்தரவைத் தொடர்ந்து அங்கு பீட் போலீசார் மேலும் 2 பேர் பணியமர்த்தப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் நேற்று முதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடும் நபர்களிடம் விசாரணை மேற்கொள்வது, மதுபானம் கடத்தல், திருடர்கள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரி, சுப்பையா சாலையில் உள்ள ரயில்வே நிலையத்திலும் ஒதியஞ்சாலை போலீசார் 2 பேர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் பயணிகளின் உடமைகளை அவர்கள் அவ்வப்போது சோதனையிட்டு வருகின்றனர். இப்பணியை இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் எஸ்ஐ பிரபு ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: