×

காலிமனைகளை சுகாதாரமாக பராமரிக்காத உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

புதுச்சேரி, ஜன. 22: உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:  உழவர்கரை நகராட்சி பகுதிகளில் நிறைய காலிமனைகள், அதன் உரிமையாளர்களால் சரியாக பராமரிக்கப்படாமல் சுற்றி உள்ளவர்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் உள்ளன. இக்காலி மனைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நகராட்சியை பொதுமக்கள் அணுகுகின்றனர். காலிமனைகளின் உரிமையாளர்கள் பற்றிய குறிப்புகள் நகராட்சியால் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் மேற்படி உரிமையாளர்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது. எனினும் பல காலிமனைகளின் உரிமையாளர்கள் விசாரணைக்குப்பிறகு கண்டறியப்பட்டு அவர்களுக்கு நகராட்சி சார்பில் காலிமனைகளை சுத்தம் செய்து பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்குமாறு அறிக்கை தரப்படுகிறது. சில உரிமையாளர்கள் நகராட்சியின் அறிக்கைக்கு பிறகு தங்களின் காலி மனைகளை பராமரிக்க தொடங்கியுள்ளனர்.
 
அப்படி நகராட்சியின் அறிவுறுத்தலுக்கு பிறகு தங்களின் காலிமனைகளை பராமரிக்காத 9 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட துணை நீதிபதிக்கு நகராட்சியால் பரிந்துரை செய்யப்பட்டது. மேற்படி, நகராட்சியின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு மேற்படி 9 நபர்களையும் விசாரணைக்கு அழைத்து மாவட்ட துணை நீதிபதி இந்திய குற்றவியல் சட்டம் 1973, பிரிவு 133ன் கீழ் விசாரணைக்கு அழைத்து, விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி காலிமனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உழவர்கரை நகராட்சி பகுதியில் காலி மனைகள் வைத்திருப்பவர்கள், உடனடியாக அதை சுகாதாரமாக பராமரிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. பராமரிக்காதவர்களின் விவரம் நகராட்சியால் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு நகராட்சியால் அறிவுறுத்தல் அனுப்பப்படுகிறது. இதற்கு பிறகும் காலிமனைகளை சரிவர பராமரிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. காலிமனைகள் பற்றிய புகார்கள் தருபவர்கள், காலிமனைகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களோடு தர கேட்டுக் கொள்ளப்படுகிறது. புகார் அளிக்க நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்- 2200382, வாட்ஸ்அப் எண்- 7598171674 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : owners ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு