நவீன பிளாஸ்டிக் பேரிகார்டுகள் அமைப்பு

புதுச்சேரி, ஜன. 22: புதுச்சேரி பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தண்ணீர் மற்றும் மணல் நிரப்பி பயன்படுத்தும் நவீன பிளாஸ்டிக் பேரிகார்டுகள் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.  புதுவை மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக விபத்துகள் அதிகளவில் நடப்பதால் போக்குவரத்தை சீரமைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக முக்கிய அரசு அலுவலகங்கள், சந்திப்புகள், சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில் பேரிகார்டுகள் போடப்பட்டு இருந்தன. இரும்புக் கம்பியால் ஆன இந்த வகை பேரிகார்டுகள் மழை மற்றும் பலத்த காற்று வீசும்போது சரிந்து விழுந்து வாகன ஓட்டிகளுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் எழுந்தன. இந்த நிலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் இதற்கு மாற்று ஏற்பாடாக புதிதாக மொத்தம் 60 நவீன பிளாஸ்டிக் பேரிகார்டுகள் வாங்கப்பட்டுள்ளது. இவை சரிந்து விழாமல் இருக்க பேரிகார்டு உள்ளே தண்ணீர் மற்றும் மணல் கலந்து நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் ஒளிரும் வகையில் அவற்றின் மீது ஒளிரும் தன்மை கொண்ட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

 இந்த நவீன பேரிகார்டுகள் தற்போது புதுச்சேரி சட்டசபை, காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு போடப்பட்டுள்ளன. மேலும் ராஜீவ்காந்தி சிக்னல் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளிலும் இவை பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய இடங்களிலும் இந்தவகை புதிய போிகார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, புதுச்சேரியில் உள்ள கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு டிராபிக் காவல் நிலையங்களுக்கு தலா 15 நவீன பிளாஸ்டிக் பேரிகார்டுகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இவை தேவைப்படும் இடங்களில் அந்தந்த காவல்நிலைய அதிகாரிகளின் உதவியோடு போக்குவரத்து சீரமைப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.

Related Stories: