தாமாக முன்வந்து ஐகோர்ட் கிளை விசாரணை போலீஸ் விசாரணைக்கு சென்றவர் மர்மச்சாவு? அரசு விளக்கமளிக்க உத்தரவு

மதுரை, ஜன.22: போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடத்தல் வழக்கின் விசாரணைக்காக அவனியாபுரம் போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது தனது மகனை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவர் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். நீதிபதி விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன் ஏற்கனவே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். மனு விசாரணையில் இருந்த நிலையில், முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல் ஹென்றிடிபேன் ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் மனுவை வாபஸ் பெற்றதாக கூறியிருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் ஐகோர்ட் கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்ேபாது அரசுத் தரப்பில் மனுதாரர் தான் மனுவை திரும்ப பெற்றார். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு தொடர்பாக அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிப்.19க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: