நெல்லை- குமரி நான்கு வழிச்சாலை மேம்பாலங்களில் வளரும் மரக்கன்றுகளால் விபத்து அபாயம்

வள்ளியூர், ஜன.22:  நெல்லை- கன்னியாகுமரி சாலையில்  வள்ளியூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளால்  பாலம் பலமிழந்து வருவதோடு விபத்து அபாயம் நிலவுகிறது. இவை முழுமையாக அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உள்ளனர்.  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நான்குவழி விரைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை-மதுரை மற்றும் நெல்லை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைகளில் பல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல மேம்பாலங்களில் பக்கவாட்டு பகுதிகளில் திடீர் மரக்கன்றுகள் முளைக்கின்றன. சில இடங்களில் பெரிய அளவில் மரக்கன்றுகள் வளர்ந்து நிற்கின்றன. சில இடங்களில் அகற்றினாலும் அங்கு மீண்டும் மரக்கன்றுகள் தழைக்கின்றன. குறிப்பாக வள்ளியூர்- கன்னியாகுமரி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் முறையான பராமரியபின்றி பலமிழந்து வருகிறது. வள்ளியூரிலிருந்து நாகர்கோவில் கன்னியாகுமரி செல்லும் பஸ்கள், தொழிற்சாலைகளுக்கான கன்டெய்னர் லாரிகள் வாகனங்கள் என தினமும் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன.

 இந்த மேம்பாலம்   சுங்கசாவடி நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தாலும் மேம்பாலத்தில் மேற்புறத்தின் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் குழிகளில் சறுக்கி விழுந்து விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு வருகிறது.   இந்நிலையில் மேம்பாலத்தின் பக்கவாட்டு  சுவர்களில் மரக்கன்றுகள் அதிகளவில் முளைத்துள்ளன. பல இடங்களில் 5 அடி உயரத்திற்கும் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் ஏற்கனவே வளர்ந்த பகுதிகளில் மீண்டும் மரக்கன்றுகள் வளரத்தொடங்கியுள்ளன. இதனால் பாலம் பலமிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்களுக்கு கட்டம் வசூலிக்கும் இந்த சாலை பராமரிப்பினர் இவற்றை கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.  எனவே நான்குவழிச்சாலையை பராமரிக்கும் அமைப்பினர் இந்த பாலத்தில் மட்டுமின்றி நான்குவழிச்சாலையில் உள்ள மற்ற பாலங்களில் வளர்ந்து உள்ள மரக்கன்றுகளையும் முழுமையாக அகற்றுவதுடன் மீண்டும் வளராமல் கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: