×

கலிங்கப்பட்டியில் அரசு பள்ளி ஆண்டுவிழா செல்போன்களை எந்த நேரமும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது

திருவேங்கடம், ஜன.22:  செல்போன்களை எந்த நேரமும் மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது என கலிங்கப்பட்டியில் நடந்த அரசு பள்ளி ஆண்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அறிவுரை கூறினார்.
 தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு தலைமையாசிரியர் ராம்குமார் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பாராம், அரசு மருத்துவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.  விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, வகுப்பு வாரியாகவும், 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிக்கு 100 சதவீதம்  வருகைதந்தவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கும் தனது சொந்த செலவில் கைக்கடிகாரம், ஸ்கூல் பேக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கிப் பாராட்டிப் பேசினார்.  

அப்போது அவர் கூறுகையில், ‘‘நமது மாணவ, மாணவிகள் நன்றாகப்  படித்து கல்வியில் சிறந்து விளங்கி பல்வேறு அரசு துறைகளில் மிகப்பெரிய பொறுப்புகளுக்கு வந்து சாதனை  படைக்க வேண்டும்.  கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் செல்போன்களை அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே  பயன்படுத்த வேண்டும். மாறாக எந்த நேரமும் செல்போனை பயன்படுத்தக்கூடாது.  குறிப்பாக தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கி அறிவையும் மழுங்கடித்துவிடக் கூடாது. அத்துடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சொல்படி கேட்டுநடக்க  வேண்டும். அரசு பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை தேடித்தர வேண்டும்’’ என்றார். முன்னதாக முதுகலை கணித ஆசிரியர் ராஜேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். இதையொட்டி நடந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. விழாவில் மதிமுக மாவட்டச் செயலாளர் திமு ராஜேந்திரன், குருவிகுளம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  தமிழாசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : state school ,Kalingapatti ,
× RELATED மணப்பாறை கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 650 காளைகள் அதிரடி பாய்ச்சல்