திருச்செந்தூர் வழித்தட ரயில் நிலையங்களில் 4 மாதங்களாக டெலிபோன் சேவை துண்டிப்பு

வைகுண்டம், ஜன.22: திருச்செந்தூர் வழித்தட ரயில் நிலையங்களில் கடந்த 4 மாதங்களாக டெலிபோன் சேவையை பிஎஸ்என்எல் நிர்வாகம் துண்டித்துள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.   ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களாக மத்தியஅரசின் ரயில்வே மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் விளங்குகிறது. அதிகரித்து வரும் பஸ் பயணக்கட்டணத்தால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இதேபோல், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையால் மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலட்சியத்தால் திருச்செந்தூர் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் டெலிபோன் சேவையை பிஎஸ்என்எல் நிர்வாகம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துண்டித்தது. இதனால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.   திருச்செந்தூர் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் டெலிபோன் பில் மொத்தமாக கட்டப்படுகிறது. ஆனால், தனித்தனியாக வரவு வைக்கப்படவில்லை எனக்கூறி ரயில் நிலையங்களில் உள்ள டெலிபோன் இணைப்பை பிஎஸ்என்எல் நிர்வாகம் துண்டித்துள்ளதாக ரயில்வே பணியாளர்கள் தெரிவித்தனர்.  

 இதுகுறித்து தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜெயபாலன் கூறுகையில், ‘ரயில் நிலையங்களில் டெலிபோன் இணைப்பை துண்டித்துள்ளதால் ரயில்கள் குறித்த தகவல் பெறுவதில் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மத்திய அரசின் இரு துறைகளிடையே நிலவும் ஈகோ பிரச்னையை மறந்து பொதுமக்களின் நலன்கருதி உடனடியாக திருச்செந்தூர் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு மீண்டும் டெலிபோன் இணைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.   இப்புகார் குறித்து வைகுண்டம் பிஎஸ்என்எல் அலுவலகப்பணியாளர்கள் கூறுகையில், ‘திருச்செந்தூர் வழித்தட ரயில்நிலையங்களுக்கான டெலிபோன் கட்டணம் கடந்த ஜூன் 17ம் தேதி கடைசியாக செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் எவ்வித கட்டணமும் செலுத்தப்படவில்லை. ரயில்வே பணியாளர்கள் கூறுவது போல் மொத்தமாக டெலிபோன் கட்டணம் செலுத்தப்பட்டு இருந்தாலும் அதற்குறிய சான்றை அளித்தால் உடனடியாக இணைப்பு கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு பூட்டு  ரயில்வே தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறிய புகார் குறித்து விபரம் பெறுவதற்காக வைகுண்டம் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மதியம் 12.30 மணி அளவில் சென்ற போது அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு இருந்தது. இது குறித்து அங்கு இருந்த காவலாளியிடம் கேட்டபோது, ‘விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அலுவலகத்தை பூட்டிவிட்டு ஒட்டுமொத்த பணியாளர்களும் தூத்துக்குடி சென்றுவிட்டனர்’ என தெரிவித்தார். அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தததால் வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: