கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

கோவில்பட்டி, ஜன. 22: கோவில்பட்டி அருகே நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் முத்தால்ராஜ். இவர் அப்பகுதியை சேர்ந்த தனசேகரனுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். இந்த நிலத்தை ஊர் பயன்பாட்டிற்கு வாங்குவதற்காக அப்பகுதி மக்கள் முடிவு செய்து இருந்ததாகவும், அந்த நிலத்தை முத்தால்ராஜ் வாங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முத்தால்ராஜ் மற்றும் இவருடைய உறவினர்கள் என மொத்தம் 6 பேரின் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தால்ராஜின் சகோதரியான சக்கரைச்சாமி மனைவி சண்முகவேல் தாய் (58) கோவில்பட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட் உத்தரவின்பேரில் நக்கலைக்கோட்டையை சேர்ந்த 9 பேர் மீது எட்டயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். எனினும் முத்தால்ராஜ் மற்றும் இவருடைய உறவினர்களின் குடும்பத்தினருக்கு நக்கலைக்கோட்டையில் உள்ள கடைகளில் பொருட்கள் வழங்கவும், உள்ளூர் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பதாகவும், பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்வதில்லை என்றும், இந்த ஊர் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிககையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி நேற்று முன்தினம் சண்முகவேல்தாய், தனது 10 வயது பேரனுடன் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலக வளாகத்தில் சண்முகவேல்தாய் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்குள்ளவர்கள் மற்றும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் விரைந்து சென்று, அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: