×

₹2 கோடி நிலுவைத்தொகை வழங்காமல் அலைக்கழிப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பூட்டுப்போட்ட விவசாயிகள்

வந்தவாசி, ஜன.22: வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுைற விற்பனை கூடத்தில் நெல்கொள்முதல் செய்ததற்கான நிலுவைத்தொகையை வழங்காமல், வியாபாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி விற்பனை கூடத்திற்கு நேற்று பூட்டுப்போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி அடுத்த பாஞ்சரை, தென்தின்னலூர், மழையூர், அரியம்பூண்டி, சீயமங்கலம், வெடால், சித்தருகாவூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல், மணிலா, கேழ்வரகு உள்ளிட்ட பொருட்களை தேசூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்வது வழங்கம்.

அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை ₹2 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வியாபாரிகள் வாங்கியுள்ளனர். இதற்கான தொகை நெல் கொள்முதல் செய்த 2 நாட்களில் வழங்க வேண்டுமாம். ஆனால் 2 மாதங்களாக தொகையை வழங்காமல் வியாபாரிகள் காலம் கடத்தி வந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து விற்பனைகூட மேற்பார்வையாளர் பாலுவிடம் விவசாயிகள் முறையிட்டதில், அவர் சரியான பதில் அளிக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று ஒழுங்குமுைற விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு நிலுவைத்தொகை வழங்கக்கோரி கோஷமிட்டனர். மேலும், பொங்கல் பண்டிக்கைக்காக நெல்லை விற்பனை செய்தால், பண்டிகை முடிந்த நிலையிலும் பணம் தராமல் உள்ளீர்கள், பண்டிகைக்காக கடன் வாங்கி செலவு செய்துள்ளோம், கடன்காரர்கள் வீட்டின் முன் நின்றுள்ளனர். எங்கள் நெல் மூட்டைகளை வாங்கிக்கொண்டு வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசுவதா என மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, விற்பனை கூட மெயின் கேட்டை பூட்டி மழையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் ரவிச்சந்திரன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 2 நாட்களில் பணம் வழங்க ஏற்பாடு செய்வதாக மேற்பார்வையாளர் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக தேசூர்- வந்தவாசி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...