அம்பத்தூர் அருகே விபத்தில் வியாபாரி பலி ஆம்புலன்ஸ் வர தாமதம்; வாகன ஓட்டிகள் மறியல்

அம்பத்தூர்: தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் குணாளன் (63). பருப்பு வியாபாரி. இவரது நண்பர் புவனேஸ்வரன் (59). துணிக்கடை நடத்தி வருகிறார். இருவரும் கொடுங்கையூர், எம்.ஆர் நகரில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்க குணளான், தனது நண்பர் புவனேஸ்வரனுடன் ஐயப்பன்தாங்கலுக்கு மொபட்டில் சென்றார். பட்டரைவாக்கம் ரயில்வே பாலம் அருகில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் குணாளன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், புவனேஸ்வரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த வாகன ஓட்டிகளும், போக்குவரத்து போலீசாரும் புவனேஸ்வரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். குணாளன் இறந்து ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனை அடுத்து, வாகன ஓட்டிகள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், 30க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அம்பத்தூர் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதனை அடுத்து, இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் தலைமையில் போலீசார் திருமுல்லைவாயலை சேர்ந்த தமிழன் (25), ஆவடியை சேர்ந்த பெனிஸ்கர் (28), பெரம்பூரை சேர்ந்த தரணிராஜ் (29), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் (48), முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (34), வியாசர்பாடியை சேர்ந்த சீனிவாசன் (34), சைதாப்பேட்டையை சேர்ந்த பிரதிஸ்ராஜ் (28), அனகாபுத்தூரை சேர்ந்த ராஜேஷ் (29) ஆகிய 8 பேரை கைது செய்தனர். பிறகு போலீசார்  ஆம்புலன்சை வரவழைத்து குணாளன் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக போலீசார் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: